Saturday, November 1, 2014

பொரிக்கப்பட்ட பொறியாளர்கள்

கட்டிடம், இயந்திரம், கணினி, மின்னனு
இப்படி கல்லூரியில் எந்த துறை சேர்ந்தாலும்
குட்டைகள் குலத்தில் சேர்வது போல எல்லோரும்
சிலிக்காண் பள்ளத்தாக்கில் கூண்டாய் சிக்கிக் கொண்டோம்
மென்பொருள் மேய்த்து எம்பொருள் சேர்க்கவே!
வாரம் முழுதும் அயராது உழைத்து
வரி முழுதும் தவறாது இழைத்து கையில்
வாங்கிய பணத்தை செலவு செய்தால்
வஞ்சனையோடு சமூகம் சொல்கிறது
'இந்த ஸாஃப்ட்‌வேர் பசங்க வந்து தான்...'
நீர் முதல் பீர் வரை
குண்டு ஊசி முதல் குளிர் ஏசீ வரை
எது விலை ஏறினாலும் நாங்கள் தான்
ஊரார் வாய்க்கு அவல்
திருவான்மியூரில் எங்களை வைத்து நாலு வீட்டின்
வாடகை வாங்கியவன்
வரி ஒன்றும் கட்டாது
இன்று திண்டிவனம் வரை ரியல் எஸ்டேட் போட்டு
எங்களுக்கே விற்கிறான்
உல்லாசத்திற்கு குறைவில்லை இங்கே எனினும்
மன உளைச்சலுக்கும் குறைவில்லை
உள்ளே வந்தவருக்கே வெளியே இருந்த சுகம் புரியும்
அமைதியாய் இரு வருடங்கள் ஓடிவிட
அவன் இவன் காலைப் பிடித்து
அயல் நாடு சென்று சேர்வோம்!!
அந்நிய செலவானி சேர்ந்ததும்
காதலுக்கு கூட சம்மதம் கிடைத்து விடும்
கல்யாணத்திற்கு மூன்று வாரம் விடுமுறை
கிடைக்காது! ஓபாமா வந்து சொன்னால்தான்
ஓரிரு வாரம் விடுமுறை கொடுத்து அனுப்பி
வைப்பார்கள், கையில் அலைப்பேசியுடன்!
உடல் தளர்ந்து உள்ளம் அயர்ந்து
உள் வாகனம் நின்ற போதெல்லாம்
'மதிப்பீடு' என்பார்கள் ஓடுவோம்
'அயல் நாடு' என்பார்கள் ஓடுவோம்
'அடுத்த பதவி' என்பார்கள் ஓடுவோம்
இருபது வருடங்களில் அடையும் முன்னேற்றத்தை
பத்தே வருடங்களில் பார்த்து விடுவதால்
தலையில் மிஞ்சுவது அரை முடி அதுவும்
பல சமயம் நரை முடி!
பூமியில் நாம் வந்து பிறந்ததே
'ப்ரொக்ரம்' எழுதி புண்ணியம் தேடவே
என்ற போக்கிலே திரிவோம்
கணினியைத் தாண்டியும் ஒரு கண்டம்
உள்ளது, என்று அதை அறிவோம்?

No comments:

Post a Comment