Sunday, May 11, 2014

அன்னையர் தினம்

அன்னையே உன்னையே எண்ணியே
நான் வடித்த பண்ணையே
படிக்கிறேன் கேள்

கண நேரமே எனை பார்த்தாலும்
என் கண்ணில் பசியோ பயமோ
இன்பமோ துன்பமோ
நீ அறிவாய்

உன் மடியில் நான் உறங்கிய நேரம்
கவலை இல்லாமால் வாழ்ந்த காலம்
தெய்வம் தேவை இல்லை நான்
தாயை வணங்கும் சமயம்

மழையில் நனைந்து நான் வீடு வந்தால்
மற்றவர் என்னை குற்றம் சொல்வர்
பிழை இல்லை உன்மேல் என்று கூறி
என் தலை துவட்டி
மழையை குற்றம் சொல்வாய் நீ

காய்ச்சல் வந்து நான் படுத்தால்
கொதித்து போய் விடுவாய் நீ
என் கண்ணில் தூசொன்று விழுந்தால்
கலங்கி போய் விடுவாய் நீ

இப்படி எல்லாம் எனை
வளர்த்த நீ அங்கே

இங்கே அன்னையர் தினமாம்
உனை கணினியில் கண்டே
வாழ்த்து கூற வேண்டும் இன்று
நானும் கடல்தாண்டி
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நன்று!!

Saturday, May 3, 2014

கடலோரத்தில் ஒரு கட்சிக் கூட்டம்

கடற்கரை மணல்வெளியில்
நிலவொளியில் அலையொலி கேட்டு
நான் இருந்ததன் எதிரொலி இது

தேர்தல் நேரம் என்பதாலோ
வழக்கத்தை விட மிகையாய்
அலை அலையாய் திரண்டு
வந்து ஆர்பபரிப்பு செய்கிறாய்?

கண்ணை மூடி
கால் நனைத்து நின்றால்
மண்ணோடு சேர்த்து
மனதின் கவலைகளையும்
இழுத்துச் செல்வது என் ஆட்சி!

என் மேல் நீங்கள்
குப்பை எறிந்தாலும்
அதை உதறித் தள்ளி
உப்பை தந்தது இந்த ஆட்சி!

இத்தனை சாதனைகளைப் புரிந்த
கடலாகிய எனக்கு
நிலவுச் சின்னத்தில் வாக்களித்து
இரவுலகில் என் ஆட்சி
நீளும்படி நீங்கள் செய்வீர்களா?
என்று எங்களைப் பார்த்து கேட்பது புரிகிறது!
நிச்சயம் செய்வோம்! 

Thursday, May 1, 2014

என்று முடியும் இந்த தீவிரவாதம்?

ஏய் தீவிரவாதியே
வெடிகுண்டு சத்தத்தில்
உன் கோரிக்கையின் குரல் 
ஒடுங்கி விடுகிறது

தெருவில் செல்லும் ஒவ்வொரு இந்தியனும்
பாதுகாப்பு உடை அணியாத
அணுகுண்டு சோதனையாளன்
உயிரைக் கொடுத்து கண்டு பிடிக்கிறான்
நீ வைத்த வெடிகுண்டை

நீ ரயிலில் குண்டு வைத்தால்
விமானத்தில் செல்லும் அளவிற்கு
இந்தியன் பணக்காரன் அல்ல
நீ விமானத்தையும் விட்டு வைப்பதல்ல

ஓரிரு நாட்கள் தள்ளிப் போடுவோம்
ஆனால் மீண்டும் அந்த ரயலிலோ பேருந்திலோ தான்
நாங்கள் ஏறியாக வேண்டும் எங்கள்
வாழ்க்கைப் பயணத்தை தொடர

மனித உயிரை மதிக்காத உனக்கு
மதிப்பு கொடுத்து பேச யாரும் வாரார்
குண்டுகள் தீர்ந்தாலும் தீரும் ஆனால்
உனக்கு அஞ்சி ஓடி விட மாட்டோம் இந்த ஊரார்!