குக்கூ
நாயகன் நாயகி இடையே மலரும் காதலும் அதில் அவர்கள் வெற்றி பெற ஏற்படும் தடங்கல்கலும்தான் கதையின் சுருக்கம். நாயகன் நாயகி மற்றும் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் பார்வை இல்லாதவர்கள். கண்ணில்லாத கதாபாத்திரங்களை கொண்டு இந்த காதல் காவியத்திற்கு ஒளி கொடுத்துள்ளார் இயக்குநர்.
நாயகன் தமிழ், நாயகி சுதந்திர கொடி. நக்கல் நையாண்டியில் தொடங்கும் இவர்களது சந்திப்பு, மெல்ல மெல்ல காதலாய் வளரத் தொடங்குகிறது. படத்தின் எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு இவர்கள் மீது இரக்கம் வராமல் காதல் வரும்படி செய்துள்ளது மிகப்பெரிய வெற்றி. மின்சார ரயில் போல மிதமான வேகத்தில் செல்லும் திரைக்கதையில் அந்த நிலையத்தில் வண்டி நின்று சென்றதா என்று தோன்றும் அளவுக்கு சிறிய மெல்லிய பாடல்களை பிணைத்திருப்பது பலம்.
பாடல் வரிகள் படத்தின் கதையையும் சூழ்நிலைகளையும் தவிர எதையும் பேசுவதில்லை. மனதை வருடிய ஒரு சில வரிகள்
ஆசைகள் தீரும் மட்டும் கொள்ளும் அன்பினில் அழகு இல்லை
வெந்து போகிற வேளையிலும் அன்புத்தீ என்றும் அணைவதில்லை
உருவெது வடிவெதுவோ உறவுகள் உணர்ந்து தொட
இருள் எது ஒளி எதுவோ ரெண்டு இருதயம் கலந்து விட
நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவர் பங்கை கச்சிதமாய் செய்துள்ளனர். எந்தவித மசாலா சாமான்களையும் சேர்க்காமல் ஒரு ருசியான படத்தை கொடுத்துள்ளனர். தலைப்பின் காரணத்தை படத்தின் முடிவு உணர்த்தும். திரையை விட்டு வெளியே வருகையில் எனக்கு தோன்றியது இது. அரை நிமிடம் ரயில் நிலையத்தில் நிற்கும் பொழுது நாம் பார்த்து உதாசீனப் படுத்தும் 'தமிழ்'களுக்கு பின்னால் இப்படி ஒரு காதல் கதை இருக்கக் கூடுமோ?
சேவை மனப்பான்மை, குடித்து விட்டு வாகனம் ஒட்டுதல், அக்கறை இன்றி அதை பார்த்து செல்வோர், தேர்தல் நேரத்தில் காவல்துறையின் சோதனை, அரசாங்க வேலைக்கு லஞ்சம் கேட்கும் இடைத்தரகர், மன அழகை பார்த்து காதலிக்கும் நாயகன் நாயகி நிற்கும் பேருந்து நிலைய கூரையில் சிவப்பழகு களிம்பின் விளம்பரம் என்று ஆங்காங்கே சமூகத்தின் மீது சில சவுக்கடிகள்.
இப்படிப்பட்ட படங்களை ஆதரித்தால்தான் தமிழ்த் திரையுலகம் வளரும், வாழும். இயக்குநர் ராஜூ முருகனின் முதல் படி வெற்றிப் படிதான்.
ஒரு வேண்டுகோள், அரங்கினுள் இருந்து கொண்டு 'படம் பாத்துட்டு இருக்கேன்' 'படம் பாத்துட்டு இருக்கேன்' ன்னு சொல்லிட்டு படத்தையே பார்க்காம செல் போனையே பார்த்து கொண்டு இருந்து விட்டு வெளியில் வந்து 'first half ok, second half bore' என்று அரை குறை விமர்சனங்களை வீசாதீர்கள். என் அருகே இருந்த நண்பர் வெள்ளித் திரையை விட கைப்பேசியின் திரையைத் தான் அதிகம் பார்த்து கொண்டு இருந்தார்.