Friday, November 19, 2010

இது ஒரு பொன் மாலைப் பொழுது

உன் வட்ட முகத்தை எட்ட நின்று
பார்த்திருக்கும் நிலா

உன் மல்லி வாசத்தை அள்ளிப் போக
காத்திருக்கும் தென்றல்

உன் முகவொளி காணாமல் தன் அகவொளி
மறைக்காத மாலைக் கதிரவன்

உன் அடிப் பாதம் நனைக்கப் பிடிவாதமாய்
கரை வந்து போகும் கடலலை

எனக்காக இல்லை என்றாலும்
இவற்றுக்காக வா

காத்திருக்கிறேன் கடற்கரையில்
என் காதலி நீ வரும் வரையில்



Wednesday, November 17, 2010

மனிதரே எம் மனிதரே...

லாட்டரிகளில் லட்சங்களைத் தேடும் லக்கி மனிதரே

உங்களின் வாழ்க்கை லட்சியங்களைத் தேடுங்கள்

பந்தயக் குதிரை மீது பணம் கட்டும் விந்தைய மனிதரே

உங்களின் சிந்தனைக் குதிரையைத் தூண்டுங்கள்

சாராய போதையில் சிக்கித் தடுமாறும் சபல மனிதரே

உங்களின் வாழ்க்கைப் பாதையை தடம் மாற்றுங்கள்

மனிதனை ஆளும் தீய பழக்கங்களில் இருந்து விடுபட

எம் மனிதரே விடுதலை முழக்கமிடுங்கள்!!


Tuesday, November 2, 2010

யாருக்கு தீபாவளி??

புதிதாய் திருமணமான இளம் தம்பதியருக்கு
மாமனார் செலவில் தலை தீபாவளி

மக்களின் பணத்தை திருடும் அதிகாரிக்கு
தினம் தினம் தீபாவளி

தீராமல் வதம் செய்யும் தீவிரவாதிகளுக்கு
௦நினைத்த போதெல்லாம் வெடிகுண்டு தீபாவளி

முப்போகம் விளைந்தால் தான் உழவனுக்கு
உற்சாகம் பொங்கும் தீபாவளி

வயிறு நிறைந்தால் தான் ஏழைகளுக்கு
வாழ்க்கையில் ஒரு முறையாவது தீபாவளி

ஒற்றுமையாய் கூடி வாழ்ந்தால் தான்
ஒவ்வொருவருக்கும் உண்மையான தீபாவளி